×

சின்னமனூர் சிவகாமியம்மன் பெரியகோயில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

சின்னமனூர், அக். 4: சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளை கடந்த நிலையில் இறைவனின் புத்துயிர் கிடைக்க கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னமனூர் மார்க்கையன்கோட்டை சாலையில் ஆயிரம் ஆண்டுகள் கடந்த ராணிமங்கம்மாள், பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த சிவகாமியம்மன் கோயில் உள்ளது.மதுரை மீனாட்சி அம்மன்கோயிலின் மறுபிம்பமாக விளங்கிடும் இந்த சின்னமனூர் பெரியகோயில் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் வயல்வெளிகளின் மத்தியில் இயற்கையாய் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.தினமும் 6 கால பூைஐகள் நடத்தி அன்னதானமும் வழங்கப்படுகிறது.சித்திரை மாதத்தில் 18 நாள் மண்டகப்படியுடன் சித்திரை பெருந்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முக்கிய நிகழ்வாக சிவகாமியம்மனுக்கும் பூலாநந் தீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடக்கும். இரண்டு நாட்களுக்கு தேரடியிலிருந்து புறப்படும் தேரோட்டம் மக்கள் தேரோட்டமாக நான்கு ரத வீதிகளில் சுற்றி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிப்பர்.

திருமண வைபவங்களும் அதிகளவில் நடக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் பிரதோஷ தினத்தன்று பெரிய நந்தி பெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.63 நாயன்மார்களும் நீண்ட வரிசையில் நின்று வருகிற பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி மகா கும்பாபிஷேம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 12 ஆண்டுகளை கடந்து 13 ஆண்டுகளை தொடும் நிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்ப டாமல் இருப்பது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து அறநிலையத்துறையும் அதற்கான முயற்சிகள் ஏதும் இதுவரையில் எடுக்காமல் காலம் கடத்தி வருகிறது.மாவட்டத்தில பிரசித்தி பெற்ற பெரியகோயிலின் முன்பாக மீனாட்சியம்மன் கோயிலில் பொற்றாமறை குளம்போல் பெரிய தெப்பம் இருக்கிறது.சின்னமனூரில் இருபோகம் நெல் சாகுபடிக்கு ஐதீக முறைப்படி பாசனநீர் திறந்தவுடன் இந்த குளத்தை நிரப்பிய பிறகே உடையகுளம், செங்குளம், கருங்கட்டான் குளங்களில் பாசன நீர் நிரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் முன்புறமுள்ள ஆர்ச் கட்டப்பட்டு மேலே சுதைகள் எதுவும் வைக்காமல் அறைகுறையாக இருக்கிறது. கோபுரங்களிலும் ஆலமர செடிகள் வளர்ந்து பல இடங்களில் சிதிலமடைந்து இருக்கிறது. எனவே கோயிலில் புத்துயிர் கிடைப்பதற்கும் புண்ணியம் புதுபிக்கவும் மகா கும்பாபிஷேம் விரைவில் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnamanoor Sivakamyamman ,
× RELATED பெரியகுளத்தில் சாக்கடை கழிவுநீரை அகற்றக்கோரி மறியல்